சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இரு தினங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பேசுகையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து, கஸ்துாரி நிருபர்களிடம் ”தெலுங்கு மக்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோர் குறித்து பேசினால், அதை தெலுங்கு மக்கள் குறித்து சொன்னதாக, திசை திருப்பி விடுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது,” என்றார். ஆனாலும் தொடர்ந்து கஸ்தூரிக்கு கடும் கண்டனங்கள் அதிகரிக்கத்துவங்கின. இதன் எதிரொலியாக நேற்று கஸ்தூரி வெளியிட்ட அறிக்கை.. கடந்த இரண்டு நாட்களாக, எனக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. நான் எப்போதும் ஜாதி மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கு மக்களை புண்படுத்துவது, என் நோக்கம் அல்ல. கவனக்குறைவாக வந்த வார்த்தைகள், யாரையும் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். தெலுங்கு மக்கள் குறித்து, நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன். தெலுங்கில், என் திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை வழங்கி உள்ளனர். நான் வெளிப்படுத்திய கருத்துகள், குறிப்பிட்ட சில நபர்களுக்கு, அவர்களின் சூழல்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானது அல்ல இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘நடிகை கஸ்துாரி மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகார் எழும்பூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, கஸ்துாரி மீது, கலவரத்தை துாண்டுதல், தவறான கருத்துக்களை பரப்புதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.