தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு முடிந்ததும், நண்பகல் 12 மணி அளவில் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 3.94 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்களுடன் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பகல் 12.45 மணியளவில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள நிலங்கள் ,நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டு, அதற்கான செயல்முறை ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே. என். நேரு, செந்தில் பாலாஜி, முத்துசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ. வேலு, டிஆர்பி ராஜா, மு.பெ. சாமிநாதன், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.