திருச்சி -ஸ்ரீரங்கம் இடையே காவிரியாற்றின் குறுக்கே 1976 ல் பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. பாலத்தில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு வந்தன. எனவே, கடந்த 2015 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலத்தில் இணைப்பு பகுதிகள் சேதமடைந்து, வாகனங்கள் செல்லும் போது அதிர்வும் அதிகரித்ததையடுத்து, ரூ. 7 கோடி திட்ட மதிப்பில் பாலம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ம் ஆண்டு பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது. சுமார் 6 மாதம் காலம் நடந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்து 2023 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப் பட்டது.
இந்நிலையில் அண்மையில் காவிரி பாலத்தின் 9 வது தூண் அருகே கைப்பிடி சுவர் சற்று விலகியதாக தகவல்கள் பரவின. இது தொடர்பான செய்திகள் வெளியாகின. அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, மாநகர போலீஸôர் இரும்பு தடுப்புகளை (பேரிகேடுகள்) வைத்து குறிப்பிட்ட இடத்தில் மக்கள் நடந்து செல்ல தடை ஏற்படுத்தப்பட்டது.
தகவலறிந்த நெடுஞ்சாலைதுறையினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், கைப்பிடி சுவர் மற்றும் அதன் அருகேயுள்ள நடைமேடைகளில் இணைப்பு பகுதிகள் விலகியிருந்த இடத்தில் சிமென்ட்கலவை கொண்டு பூசினர். என்றாலும்
பாலத்தின் உறுதிதன்மை குறித்து பல்வேறு தகவல்கள் இணைய வழியிலும் சமூக ஊடகங்களிலும் பரவியது. இதனையடுத்து அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கூறுகையில்,..
அக்டோபர் 30ம் தேதி காவிரி பாலத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. இதில் கார் ஒன்று நடைமேடையில் மோதியதால், 9 வது தூண் அருகே நடைமேடை மற்றும் கைப்பிடி சுவர் இணைப்பு பகுதி சற்று விலகியது. இவை பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருப்பவை. இதனால் பாலத்துக்கோ பாலத்தின் உறுதித்தன்மைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. உடனே பாதிக்கப்பட்ட இடத்தில் பூச்சு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மீண்டும் பூச்சுப்பணிகள் நடந்த (சேதமடைந்த) இடத்தில், தற்போது சுமார் 2 மீட்டர் நீளத்துக்கு நடைமேடை அகற்றப்பட்டு வலுவான பூச்சு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் விலகிய இணைப்பு பகுதிகளில் உறுதியான பிடிப்பை ஏற்படுத்தும். இன்னும் 2 நாட்களில் இந்த பணி நிறைவடையும். இதனால் பாலத்துக்கோ பாலத்தின் உறுதித்தன்மைக்கோ எந்தவிதமான ஆபத்தோ, பாதிப்போ கிடையாது என்றனர்.