திருச்சி உறையூர் குழுமணி ரோடு லிங்கம் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு ( 40). இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு 11 மணிக்கு மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் மருந்து கடைக்கு வந்துள்ளார். அப்போது மருந்து கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியானார். பின்னர் உடனே உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.18 ஆயிரம் மற்றும் சிரஞ்சு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது . இதுகுறித்து திருநாவுக்கரசு உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருந்து கடை பூட்டை உடைத்து பணம் மற்றும் மருந்து பொருட்கள் திருடியதாக உறையூர் கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்த மணிஷ் (19 )என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோயில் வட்டவளை அமீன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் (வயது 20). இவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெரு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் நண்பருடன் தங்கி இருந்தார்.இவர் தனது ஸ்மார்ட் போனை சார்ஜரில் போட்டுவிட்டு அரை கதவை பூட்டாமல் அருகில் உள்ள ஜிம்முக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது அவரின் செல்போனையும், அவரது நண்பர் செல்ஃபோனையும் திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து சையது கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை பனங்காடு அல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போனையும் மீட்டனர்.