Skip to content
Home » 2025 ஏப்ரலில் தஞ்சையில்…… நீரிழிவு நோய் அகில இந்திய மருத்துவ கருத்தரங்கு

2025 ஏப்ரலில் தஞ்சையில்…… நீரிழிவு நோய் அகில இந்திய மருத்துவ கருத்தரங்கு

  • by Senthil

டில்லியைச் சேர்ந்த சர்க்கரை நோய் பாத பாதிப்பு சிகிச்சை நிபுணரும், அச்சங்கத்தின் அகில இந்திய தலைவருமான டாக்டர் ஏ.பி.எஸ்.சூரி  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

“இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 8 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சரி பாதி பேருக்கு நீரிழிவு நோயால் பாதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதில் நான்கில் ஒரு பகுதியினருக்கு கால்களையே அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நீரிழிவு பாத நோய் அவர்களுக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நிலையை நாம் பார்க்கிறோம்.

உலகிலேயே இந்தியா தான் நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகளவு உள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கு தங்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நீரிழிவு பாத நோய் சிகிச்சை குறித்து பிரத்தியேகமாக கற்றுக் கொண்டுள்ள எங்களைப் போன்ற மருத்துவர்கள் இந்திய நீரிழிவு பாதநோய் சிகிச்சை என்ற அமைப்பில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் நீரிழிவு பாத நோய் சிகிச்சை அமைப்பில் மருத்துவர்கள்  சேவை செய்து வருகிறார்கள். வரக்கூடிய 2025 ஏப்ரல் மாதத்தில் தஞ்சாவூரில் எங்களுடைய அகில இந்திய அமைப்பு, இங்குள்ள நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர்களுடன் இணைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு மிகப்பெரிய கருத்தரங்கத்தை நடத்த இருக்கிறோம்.

அந்த கருத்தரங்கத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து, பல்வேறு மாநிலங்களில் நீரிழிவு சிகிச்சையில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மருத்துவர்கள், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ சிகிச்சைகளை செய்யக்கூடிய மருத்துவர்களும்  கலந்து கொள்ள உள்ளனர். மேலும், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் எல்லாரையும் உள்ளடக்கி இந்த கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அந்த கருத்தரங்கை நடத்துவதற்கு பட்டுக்கோட்டை நீரிழிவு சிகிச்சை மருத்துவர் நிரூபன் சக்கரவர்த்தியை தலைவராகவும், செல்வின் ஜோசப்பை செயலாளராகவும் கொண்ட ஒரு வரவேற்புக் குழு அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது,  பட்டுக்கோட்டை மெரினா மருத்துவமனை மருத்துவர் நிரூபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!