தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோல விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை ஒரு கும்பல் வேடிக்கையாக நடத்தி வருகிறது. இவர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் இன்டர்போல் உதவியை நாடி உள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் திருச்சியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல்கள் வந்தன. உடனடியாக அந்த பள்ளி நிர்வாகங்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் விவரம்:
திருச்சி தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி,
கருமண்டபம் (திண்டுக்கல் ரோடு)ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி,
திருச்சி தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேனிலைப்பள்ளி,
கீழ தேவதானம் சந்தானம் வித்யாலயா ,
தென்னூர் ராஜாஜி வித்யாலயா
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து தென்னூர் மகாத்மா காந்தி நினைவு நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜாஜி வித்யாலயா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. குழந்தைகள் பள்ளிக்கு வரும்போதே அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அவர்கள் பாதுகாப்பாக திரும்பி சென்றனர்.