திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 723-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று அதிகாலை இடும்பாவனம் கேசவன் குழுவினர் நாதஸ்வரம் மங்கள இசையுடன் விழா துவங்கியது. மாலை 5மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை சிறப்பு வழிப்பாடுகள் பிராத்தனையுடன் தர்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்காரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்தனர். அப்போது நடந்த பிரார்த்தனையில் எஸ்பி ஜெயக்குமார் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். பின்னர் புனித கொடியை சுமந்த பூ பல்லக்கின் ஊர்வலம் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.
ஊர்வலம் தர்காவிலிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் கோரையாறு பாலம் சென்று திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது. அங்கு ஆட்டோ சங்கம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், வியாபாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பழைய பேரூந்து நிலையத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்காவை அடைந்தது.
தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது. சிறப்பு துஆ ஓதி அதனைத்தொடர்ந்து சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு 9மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கந்தூரி விழா துவங்கியது இதில் ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்டனர். முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜா தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.
வரும் 12ந்தேதி நள்ளிரவு சந்தன கூடு வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 16ந்தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.