Skip to content

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்.. . முன்கூட்டியே 6.8 கோடி பேர் வாக்களித்து விட்டனர்..

  • by Authour

 அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம்.  தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் 2025 ஜனவரியில் முடிவடைவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது.  இதில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரும், அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சி சார்பில் ஏற்கனவே தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், வயோதிகம் காரணமாகவும், டிரம்புடன் நடந்த விவாதத்தில் பின்னடைவை சந்தித்ததாலும், பைடனுக்கு பதிலாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றிலேயே, முதல் முறையாக, கருத்துக் கணிப்புகளில், டிரம்பும், கமலா ஹாரிசும் சமநிலையிலேயே உள்ளனர். இதனால், இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி, வாக்காளர்கள் தங்களுடைய ஓட்டுகளை முன்னதாகவே செலுத்த முடியும். தபால் ஓட்டுகள் அல்லது தனியாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில் நேரடியாக தங்களுடைய ஓட்டுகளை செலுத்த முடியும். வானிலை, மருத்துவம், வெளியூர் பயணம் என பல காரணங்களால் தேர்தல் நாளன்று ஓட்டளிக்க முடியாதவர்கள், முன்னதாகவே ஓட்டளிக்கலாம். மேலும் தேர்தல் நாளன்று நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் இந்த முறையை பயன்படுத்தலாம். இந்தத் தேர்தலில், 24.4 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 6.8 கோடி பேர் முன்னதாகவே தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை வித்தியாசமானது. இங்கு அதிபர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவது இல்லை. மாகாண அளவில் மக்கள் அளிக்கும் ஓட்டு கணக்கிடப்பட்டு, ‘எல்க்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வுக்குழு வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு மாகாணத்துக்கும் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில், அந்தந்த மாகாணத்துக்கு தேர்வுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும். இதன்படி, அமெரிக்காவில் உள்ள மொத்தம், 50 மாகாணங்களின் தேர்வுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, 538. இதில், 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர், அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!