திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அறிவொளி (33 ). இவர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது காரை ஓட்டிக்கொண்டு மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்தார். அப்பொழுது கார் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள
நாகமங்கலம் அருகே பாத்திமா நகர் பகுதியில் வந்த போது , முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த அறிவொளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கார் அப்பளம் போல் நொறுங்கியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விபத்துக்குள்ளான லாரி மற்றும் கார்களை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் பலியான அறிவொளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த அறிவொளிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.