தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்குப் பிறகு ‘இட்லி கடை’ என்னும் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பது உறுதியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரனும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் நாயகன் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அருண் விஜய் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இதில் தனுஷ் கவுரவ கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார்.
தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. விரைவில் சென்னையில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள். இறுதிகட்டப் படப்பிடிப்பினை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதுவரை 75% காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார்கள். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட உள்ளார்கள்.