இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
கதைக்களம்
முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார்.
காதல் ஒரு பக்கம் இருந்தாலும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். அவர்களுடைய காதலிக்கு முகுந்த் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது.
ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட் இணையும் முகுந்த், பின் கேப்டனாக பதவி ஏற்க, அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை என்கவுண்டர் செய்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். இந்த சம்பவத்திற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை ராணுவ படமாக மட்டுமே காட்டாமல், முகுந்த் – இந்து இருவருக்கும் இடையே இருக்கும் காதலை வைத்து திரைக்கதையை அழகாக வடிவமைத்துள்ளார்.
திரைக்கதையில் சில இடங்கள் தொய்வாக இருந்தாலும் அவை யாவும் மிகப்பெரிய மைனஸாக தெரியவில்லை. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் கமர்ஷியலுக்காக எதுவும் செய்யாமல், எதார்த்தமாக இப்படத்தை எடுத்ததற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டு.
தந்தையின் மறைவு அறியாத குழந்தை ‘அப்பாவுக்கு அடுத்த விடுமுறை எப்போது’ என்று தாயிடம் கேட்கும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது. தனது குடும்பத்தை பிரிந்து ராணுவத்திற்கு எப்போது சென்றாலும், கண் கலங்காத முகுந்த், இறுதியாக தனது மனைவி, குழந்தை, தாய், தந்தையை விமான நிலையத்தில் சந்தித்துவிட்டு செல்லும் போது கண்கலங்கிய காட்சிகளை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அழகாக எடுத்திருந்தார்.
அதே போல் முகுந்த் வரதராஜனுக்கு எப்போது பக்கபலமாக துணை நின்று விக்ரம் சிங் கதாபாத்திரமும் சிறப்பாக இருந்து. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த பூவன் அரோராவுக்கு தனி பாராட்டு.
படத்தின் அடுத்த ஹீரோ ஜிவி பிரகாஷ் குமார். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி மிரட்டி விட்டார். எமோஷனல் காட்சிகள், காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளார், வேற லெவல். ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளனர் அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் Stefan Richter. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல் எடிட்டிங் சூப்பர்.
மொத்தத்தில் அமரன் ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை. அனைவரும் பார்க்கவேண்டிய படம்..