தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, எந் நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடி காடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, அருகிலுள்ள வீரமாங்குடி, உம்பளாப் பாடி ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களும் இந்தப் பாலத்தை தான் பயன்படுத்துகின்றனர்.
ஏராளமான வாகனங்களும் இந்தப் பாலம் வழியே சென்று வருகின்றன. கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாதபோது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொழில், வேலை வாய்ப்பு, கல்விக்காக கரையை கடந்து வரும் அவர்களும், இந்தப் பாலத்தை தான் பயன்படுத்துகின்றனர்.
பாலத்தின் இருபுறமும் கைப்பிடிச்சுவர் உடைந்து காணப்படுகிறது. கவனக்குறைவாக வருகிறவர்கள் ஆற்றில் விழும் ஆபத்தும் உள்ளது. பாலமும் சிதிலமடைந்து வருவதால் விபத்து ஏற்படுவதற்கு முன்னரே பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டவேண்டும் என தஞ்சை, அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.