திருச்சி அடுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலமனுார் பாரதிதாசன் தெருவில் நேற்று மாலை சிறுவர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணாநகரை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்த சிறுவர்களை மிரட்டி விரட்டியுள்ளனர். இதை பார்த்த பாரதிதாசன் தெருவை சேர்ந்த முத்துகாத்தான்(எ) சுரேஷ், தகராறு செய்தவர்களை தட்டிகேட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர்கள் முத்துகாத்தானை சராமாரியாக அடித்து உதைத்தனர். பிறகு அங்கு உடைந்து கிடந்த டைல்ஸ் கற்களால் முத்துகாத்தான் தலையில் குத்தியுள்ளனர். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை தடுக்க வந்த திவாகர் மற்றொரு திவாகர் என்பவரையும் அந்த கும்பல் தாக்கி காயம் ஏற்படுத்தி உள்ளது.
காயமடைந்த அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ரகளையில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தகராறில் ஈடுபட்ட கும்பல்மீது மணல் திருட்டு, ஆடு திருட்டு மற்றும் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் பெண் சுற்றுலா பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது என பல வழக்குகள் உள்ளன. தீபாவளி நாளன்று ஆடு திருடும் நோக்கில் பாரதிதாசன் தெருவுக்குள் வந்திருக்கலாம் என்றும், அப்போது அதற்கு இடையூறாக பட்டாசு வெடித்த சிறுவர்களை அங்கிருந்து விரட்டியடித்திருக்க முயற்சித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.