இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நவம்பர் முதல் வாரத்திலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறவும் வாய்ப்புள்ளது. தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் பட்சத்தில் அது நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘நவ.2-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.