பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் மற்றும் சில சிக்கன் வறுவல்களை இந்த மையோனைஸ் தொட்டு சாப்பிடுவதை இளைஞர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனிடையே, ஐதராபாத்தில் மோமோசை மயோனைஸ் தொட்டு சாப்பிட்ட பெண் ஒருவர் பலியான நிலையில், 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயோனைஸால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் சில நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தெலுங்கானா உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு வருடத்திற்கு பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து புகார்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக தற்போது மையோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஹெச்எம்சி) பரிந்துரையின் அடிப்படையில் தெலங்கானா மாநிலம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.