Skip to content
Home » அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

  • by Authour

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ் குமார் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24) என்ற மகளும், ஜேக்கப் (22) என்ற மகனும் உள்ளனர். இதில் ரமேஷ்குமாரின் மனைவியான ரோஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். கடந்த 24-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் சிறிய ரக கைதுப்பாக்கி மற்றும் கத்தி முனையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் கடத்தினர். அவர்கள் ரோஜாவிடம் இருந்து 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டனர். அந்த கார் தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியை கடந்து சென்ற நிலையில், அன்றைய தினமே இரவு 10 மணி அளவில் பெண் கவுன்சிலர் ரோஜா, அவரது மகனுடன் தங்களது காரிலேயே பத்திரமாக வீடு திரும்பினர். காரை ஓட்டிச்சென்ற கடத்தல் கும்பலை சேர்ந்த டிரைவர் பரிதாபப்பட்டு அவர்களை அங்கிருந்து தப்ப விட்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கூண்டோடு பிடித்திட 3 தனிப்படைகள் அமைத்து பல்லவாடாவில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற செல்போன் அழைப்புகள் குறித்து பட்டியலிட்டு விசாரணையை மேற்கொண்டனர். இதனையடுத்து கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியான பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (26) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேந்தருக்கு பல்லவாடா கிராமத்தில் ஏற்கனவே இருந்த சுமார் 3 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கிய ரமேஷ்குமார், அவருக்கு முறையாக அதற்குரிய பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது. மேலும், சுரேந்தருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் விவசாய நிலத்தையும் ரமேஷ்குமார் குறைந்த விலைக்கு கேட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கு சுரேந்தர் மறுப்பு தெரிவித்து வந்து உள்ளார். இந்த நிலையில், அந்த விவசாய நிலத்தை வேறு யாருக்கேனும் விற்பதற்கும், அதனில் மின் இணைப்பு பெறுவதற்கும் ரமேஷ்குமார் பல்வேறு வழிகளில் தடையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இத்த முன்விரோதத்தால் ரமேஷ்குமாரை மிரட்டுவதற்காக சுரேந்தர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், ஒரு முறை பீகார் சென்றிருந்த போது வாங்கி வந்த கைதுப்பாக்கி மற்றும் கத்தி முனையில் சுரேந்தர் தன்னுடன் மேலும் 4 நண்பர்களை சேர்ந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆந்திரா மாநிலம் சத்யவேடு அருகே ஒரு காட்டு பகுதியில் அவர்களை இருக்க சொல்லி விட்டு சம்பவ இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேந்தர், தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை தொடங்கியதை அறிந்து அவர்களை விடுவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கில் சுரேந்தருடன், அவரது நண்பர்களான கும்புளி சேர்ந்த சந்தோஷ் (26), ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் அடுத்த சிறுகுபாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (34), நாகலாபுரத்தை சேர்ந்த நவீன் (28) ஆகிய 4 பேரை பாதிரிவேடு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கை துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *