தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் நேற்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து உள்ளனர். மக்கள் அதிகாலையிலேயே கங்காஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டுபுத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்தனர். அக்கம்பக்கம் வீட்டார்களுக்கும் நண்பர்களுக்கும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கோவை செல்வபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். சேலம் பொன்னம்மாபேட்டையில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் இன்று ஒன்றாக திரண்டு பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
தீபாவளியையொட்டி ஓட்டல்களில் பிரியாணி விற்பனை களைகட்டியது. இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் எங்கு பார்த்தாலும் பட்டாசு வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் காற்று மாசு ஏற்படும் அளவுக்கு மக்கள் பட்டாசு வெடித்தனர். தமிழ்நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.பலபகுதிகளில் மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். உ.பி. முதல்வர் இன்று காலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.