ஒரத்தநாடு தாலுக்கா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட வயலில் கொடிய பூச்சி மருந்தினை தெளித்து நாட்றாங்காலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் பாப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பட்டு. வயது 68. இவருக்கு சொந்தமாக தொண்டராம்பட்டு மேற்கு பகுதியில் 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் சம்பா சாகுபடிக்காக மாற்று நடப்பட்டு நேற்றுடன் 28 நாட்கள் முடிந்துள்ளது. இந்த நிலையில் தொண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சசிகுமார் மற்றும் ஆம்பலாப்பட்டு வடக்கு பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் ஆறுமுகம் ஆகிய இருவரும் சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட வயல்களில் நேற்று முன்தினம் இரவு கொடிய விஷம் கொண்ட களைக்கொல்லி பூச்சி மருந்தினை தெளித்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை பட்டு சாதாரணமாக வயலில் சென்று பார்த்தபோது நடவு செய்யப்பட்ட அனைத்து நாற்றங்காலும் காய்ந்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் சசிகுமார் மற்றும் ஆறுமுகம் இரவோடு இரவாக கொடிய பூச்சி மருந்து தெளித்த காட்சி பதிவாகி இருந்தது. இதைடுத்து பட்டு பாப்பநாடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பார்த்திபனிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விவசாய நிலங்களை பார்வையிட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இருப்பினும் ஒரத்தநாடு வேளாண்மை துறை உதவி இயக்குனர் மற்றும் காட்டு தோட்டத்தில் உள்ள வேளாண்மை துறை இணை இயக்குனர் ஐயம்பெருமாளிடம் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மனு வழங்கப்பட்டது. இதற்கு மருந்தின் தன்மையை குறித்து ஆய்வு செய்த பின் விளக்கம் தருவதாக வேளாண்மை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.