தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி கோவை மாவட்டத்தில் முதன் முதலாக வரும் 5, 6 தேதிகளில் ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் முதல்வர் செல்ல இருக்கிறார்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நவம்பர் 2வது வாரத்தில் ஆய்வு நடத்துகிறார். அநேகமாக 12ம் தேதி இந்த நிகழ்ச்சி இருக்கலாம். இன்னும் தேதிஉறுதியாகவில்லை என கூறப்படுகிறது. கள ஆய்வைத் தொடர்ந்து, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அரியலூர் மாவட்டத்தில் சிப்காட்டை தொடங்கி வைக்கிறார்.
அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து தேவனூரில் அமைச்சர் சிவசங்கரின் தந்தை சிவசுப்பிரமணியனுக்கு எழுப்பப்பட்டுள்ள மணிமண்டபத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் நேற்று பெரம்பலூரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.