தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்த ஹக்கீம்,42,. இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவதாகவும், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2,500 முதல் லாப தொகை வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், சுமார் ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தனர்.
ஆரம்பத்தில், முதலீடு செய்தவர்களுக்கு பங்கு தொகையை வழங்கி வந்த ஹக்கீம், கடந்த 2022ம் ஆண்டில், பங்கு தொகையை வழங்காமல், முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டு, தனது மனைவி பத்திமாவுடன் தலைமறைவாகினார்.
இதனால், பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2022ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை கிடப்பில் போட்டனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கலெக்டரிடம் புகார் மனுக்களை அளித்தனர்.
இதையடுத்து இவ்வழக்கு மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து, பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பூரணி தலைமையில், எஸ்.ஐ.,செந்தமிழன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில் தங்கி இருந்த ஹக்கீமை, கடந்த ஆகஸ்ட்.5ம் தேதி கைது செய்தனர். இதை அறிந்த அவரது மனைவி பாத்திமா(35) தலைமறைவானார்.
தொடர்ந்து பத்திமாவை போலீசார் தேடி வந்தனர். அப்போது பத்திமா தஞ்சாவூர், கோவை, திருச்சி என பல ஊர்களில் இடம் மாறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தொடர் கண்காணிப்புக்கு பிறகு, தஞ்சாவூர் தமிழ்பல்கலைகழகம் பகுதியில் பத்திமா இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் இரவு பத்திமாவை போலீசார் கைது செய்து, மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணையில், சுமார் 500க்கும் மேற்பட்டவர்களிடம் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.