கோவை, மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியின் 4 – வது மாடியில் இருந்து நேற்று மாலை 19 வயது பிடெக் மாணவரான 19 வயது இளைஞர் குதித்து உள்ளார். அவருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கோவை, செட்டிபாளையம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், காயம் அடைந்த மாணவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (19) என்பது தெரியவந்தது.
கல்லூரியில் பிடெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
தனக்கு சூப்பர் ஹீரோக்கள் போன்ற சூப்பர் பவர் இருப்பதாகவும், எந்த கட்டிடத்தில் இருந்தும் குதிக்க முடியும் என்றும் பிரபு நம்புவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அவரது அறை நண்பர்களிடம் சூப்பர் பவர் பற்றி அடிக்கடி பேசி உள்ளதாகவும், மேலும் தனக்கு யாரோ ஒருவர் சூனியம் செய்ததாகவும், கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்படுவதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில், அவர் மாணவர்கள் விடுதியின் 4 வது மாடியில் இருந்தார், மேலும் ஒரு சில மாணவர்கள் விடுதியின் வராண்டாவில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது
4 வது மாடியில் இருந்து திடீரென குதித்த பிரபு தரையில் விழுந்தார்.
அவருக்கு கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரது நண்பர்கள் பிரபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.