மதுரையை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் ஒன்று சேர்ந்த வந்து….. தங்கள் பிள்ளைகளின் போக்கில் மாற்றம் தெரிவதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் தொிவித்து உள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலக்கால் மெயின்ரோடு அருகே ஒரு கும்பல் பள்ளியை ஒட்டி போதை மாத்திரை சப்ளை செய்வதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீஸார் போதை மாத்திரைகளுடன் நின்று கொண்டிருந்த மூவரைக் கைது செய்தனர். அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரித்தபோது, “துவரிமான் முனியாண்டி கோயில் தெருவைச் சேர்ந்த ரகு(28), கணேசபுரம் முத்து(28), எஸ்.எஸ்.காலனி அருண் சக்கரவர்த்தி ஆகியோர் எனத் தெரியவந்தது. இதில் அருண் சக்கரவர்த்தி ரஷ்யாவில் டாக்டருக்குப் படித்து இடை நின்றவர். இந்தக் கும்பல் ஆப்ரேசனுக்குப் பின் மருத்துவர்கள் கொடுக்கும் வலி நிவாரணி மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகள் சரளமாக மருந்துக்கடைகளில் கிடைக்கும் சில மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்தச் சொல்லி விற்றதாக வாக்குமூலம் கொடுத்தனர். தொடர்ந்து போலீஸார் இவர்களுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.