Skip to content
Home » தீபாவளி….. சென்னையில் இருந்து 2 நாளில் 7 லட்சம் பேர் கிளம்பிட்டாங்க…….

தீபாவளி….. சென்னையில் இருந்து 2 நாளில் 7 லட்சம் பேர் கிளம்பிட்டாங்க…….

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்பட்டாலும், இன்று  பிற்பகலில் இருந்தே  விழா கொண்டாட்டம் களைகட்டி விடும். தீபாவளியை  முன்னிட்டு அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 11,176 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.

இதேபோல் மற்ற பேருந்து நிலையங்களிலும் முன்பதிவு மையம், உதவி மையம், பயணிகளுக்கான அடிப்படை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த 3 பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. இத்தகைய ஏற்பாடுகளுடன் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியது. அன்றைய தினம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளும் 369 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவ்வாறு இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1 லட்சத்து 10,475 பயணிகள் பயணித்திருந்தனர்.

நேற்றைய தினம் 2,125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதில் பயணிக்க பிற்பகல் முதலே பேருந்து நிலையங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாலை நேரத்தில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர்கள், சொந்த வாகனங்களில் பயணித்தோர், கடைகளுக்கு துணி, பட்டாசு வாங்கச் சென்றவர்கள், திடீர் மழை ஆகிய காரணங்களால் முக்கிய சாலைகள் திணறின. குறிப்பாக தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் அதிகளவிலான மக்கள் திரண்டனர். அனைத்து நிலையங்களிலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது.

கிளாம்பாக்கத்தில், மதுரை, திருச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் செல்லும்  பேருந்துகளில் அதிக கூட்டம் காணப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது உள்ளிட்ட காரணத்தால் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையில் இடையூறு ஏற்பட்டது. இதனால் நடத்துநரை தொடர்பு கொள்ள முடியாமல் பேருந்துகள் இருக்கும் இடத்தை தேடி பயணிகள் அலைந்தனர். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் வரும் வரை காத்திருந்ததால் பேருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.   8 ஏடிஎம் மையங்களை ஏற்பாடு செய்தபோதிலும், ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து பணம் எடுத்தனர். பெரும்பாலான பேருந்துகள் நிரம்பி வழிந்தன. முன்பதிவு செய்யாதவர்களோ பேருந்துகள் வந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர். ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகளிலும் அரசு கட்டணத்தில் மக்கள் பயணித்தனர். இதேபோல், ஆம்னி பேருந்துகளிலும் அதிகளவு மக்கள் பயணித்தனர்.

சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மக்கள் வெள்ளத்தில் மிதந்தன. ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூர், செங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இவ்வாறு பேருந்துகள், ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 2 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணமாகினர்.

இன்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,075 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 1,450 பேருந்துகளும் இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது.ஆனால் இன்று  காலை 9 மணிக்கு பின்னர்  சென்னையில் இருந்து  தொலை தூரம் புறப்பட்ட பஸ்களில் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.   சீட்கள் தாராளமாக கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் இன்று காலை பயணித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!