2025 ஆண்டு ஜனவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய வரும் 2026-ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் சிறப்பு ஆணையம் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த சிறப்பு ஆணையம் தொகுதிகளை மறுவரையறை செய்யும்.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொகுதிகள் மறுவரையறையின்போது மகளிருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் 2028-ம் ஆண்டுக்குள் தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணிகள் நிறைவடையும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக இதுவரை எந்த முடியும் எடுக்கப்படவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2,650 சாதிகள் உள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லை. குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்திய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது. தொகுதி மறுவரையறையின்போது அந்த மாநிலங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்தும் மத்திய அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாக மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் தேசிய, பிராந்திய கட்சிகளின் சந்தேகங்களுக்கும் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.