நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு வரும் 9ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி திமுகவினர் திருச்சி மாநகர் முழுவதும் ஆங்காங்கே அமைச்சர் நேருவை வாழ்த்தி பேனர்கள் வைத்து உள்ளனர்.
அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 56வது வார்டு கருமண்டபம், ஆர்.எம்.எஸ். காலனி உள்ளிட்ட பகுதிகளில் 56வது வட்ட திமுக செயலாளர் பிஆர்பி பாலசுப்பிரமணியன், அவரது மனைவியும் 56வது வட்ட கவுன்சிலருமான மஞ்சுளாதேவி ஆகியோர் சார்பில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக இப்போது திமுகவினர் பேனர் வைத்தால் அதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் படங்களை போட்டுவிட்டு, மற்றவர்களின் படங்களை போடுவார்கள். ஆனால் பாலசுப்பிரமணியன், மஞ்சுளாதேவி ஆகியோர் 56வது வார்டில் வைத்துள்ள பேனர்களில் முதல்வர் ஸ்டாலின், பிறந்தநாள் கொண்டாடும் நேரு ஆகியோரின் படங்கள் மட்டும் தான் இருக்கிறது.
குறிப்பாக உதயநிதி படம் இடம் பெறவில்லை. திட்டமிட்டே உதயநிதி படத்தை தவிர்த்திருக்கிறார்கள் என திமுக தொண்டர்களே கூறுகிறார்கள். எல்லா கட்சி நிகழ்ச்சிகளிலும் உதயநிதி படம் இடம் பெறும் நிலையில் பாலசுப்பிரமணியன் வேண்டும் என்றே தவிர்த்தாரா, அல்லது உதயநிதி படம் போட வேண்டாம் என அவரை யாரும் தடுத்தார்களா என்ற பேச்சு திருச்சி திமுகவினர் மத்தியில் தீபாவளி சரவெடியாய் வெடித்து கிளம்பி உள்ளது.
இந்த வெடி பஞ்சாயத்து திருச்சியோடு நிற்காது, சென்னை வரை வெடிக்கும் என்றும் திமுகவினர் கூறுகிறார்கள்.