Skip to content
Home » திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

  • by Senthil

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திருச்சி எம்பி துரை வைகோ  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய அருணா, டாக்டர் அருண்ராஜ் மற்றும் துறைத் தலைவர்கள் வரவேற்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , இதயவியல் பிரிவு, புற்றுநோய் பிரிவு குழந்தைகள் நலப்பரிவு, மகப்பேறு பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, மற்றும் பல் மருத்துவப் பிரிவு , அறுவைச் சிகிச்சைப் பிரிவு என ஒவ்வொரு துறைவாரியாக தற்போதுள்ள வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

மருத்துவமனையின் பொது உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தத் தேவைப்படும் வசதிகள்  குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் தரப்பில் இருந்து வருடா, வருடம் இருதயநோய்க்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவருகிறது. அதனால் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்படவேண்டும். அதேபோல, புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் ரேடியேசன் தெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கும் விரிவான ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் குமரவேல் தலைமையிலான அரசு மருத்துவர்களிடம் எம்.பி.துரை வைகோ பேசும்போது, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் இங்கு வந்திருக்கிறேன். பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார்.

ஆகவே, என்னைப் பொறுத்தவரை உங்களுக்குத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் எதிர்பார்ப்பு இவற்றை தெரிவித்தால், அரசுக்கும், மருத்துவமனைக்கும் ஒரு பாலமாக இருந்து திருச்சி அரசு மருத்துவமனையின் தரத்தை இன்னும் உயர்த்திட முயற்சிப்பேன்

மருத்துவ மனையில் நாளுக்கு நாள் வருகைதரும் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையையும் அரசுக்கு எடுத்துச்செல்வேன் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொஹையா, தி.மு.ராசேந்திரன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி  சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் கட்சியினர்  திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!