Skip to content

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு….

  • by Authour

வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி கடந்த 18-ம் தேதி வரை நடைபெற்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதன்படி மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மாவட்ட ஆட்சியர்கள்,  அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். இதன் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை தெரிவிப்பார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு நாளை முதலே விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு படிவங்கள் 6, 6பி, 7, 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம், ‘VOTER HELPLINE’ என்ற கைபேசி செயலி மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நவம்பர் 9, 10, 23, 24-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெறும். இந்த முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!