ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாகும். அதன்படி இந்த ஆண்டு 28.10.2024 (இன்று )முதல் 03.11.2024 வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் 28.10.2024 இன்று அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுதிமொழி…
நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நம்புகிறேன்.நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் ஒரு உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்,லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படுத்தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொது மக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன்* என்றும் உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியை காவல் ஆய்வாளர் வாசித்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பின் தொடர்ந்து வாசித்து ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.