அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் குறித்து பத்திரிகை, ஊடகங்களுக்கு செய்திகளை அதிகாரப்பூர்வமாக கொடுக்கும் துறை தான் செய்தி மக்கள் தொடர்பு துறை.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. திருச்சி கலெக்டர் அலுவலகத்திலும் இந்த அலுவலகம் உள்ளது. இதன் தலைமை அதிகாரியாக உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சுதாகரன் உள்ளார். இவர்களைத் தவிர மேலும் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். ஆனால் பத்திரிககைளுக்கும், ஊடகங்களுக்கும் இந்த அலுவலகத்தில் இருந்து செய்திகளே வருவதில்லை.
அமைச்சர்கள் திருச்சி வந்தாலும், அல்லது கலெக்டர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், ஒரு புகைப்படம், அதற்கான பட விளக்கத்துடன் ரத்தின சுருக்கமாக செய்திகளை முடித்து கொள்கிறார்கள். அரசின் திட்டங்கள் குறித்து விளக்கமான செய்தி அளிப்பதில்லை. பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு உதவி இயக்குனரோ, உதவி மக்கள் தொடர்பு அதிகாரியோ செல்வதில்லை.
சில நிகழ்ச்சிகளுக்கு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சுதாகர் சென்றாலும், புகைப்பட கலைஞரிடம் கேட்டு அப்படியே அதற்கான பட விளக்கத்தை மட்டும் அனுப்பி வைத்து விடுகிறார். இந்த புகைப்படம் அனுப்புவதற்கு ஒரு உதவி இயக்குனர், ஒரு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி எதற்கு, அதை போட்டோ கிராபரே செய்து விடுவாரே என பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு காரணம் இரு அதிகாரிகளின் குடும்பமும் வெளியூரில் இருப்பதால் அவர்கள் எப்போது வேலை முடியும், எப்போ ஊருக்கு போகலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள் . இருவரிடமும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லை என அந்த அலுவலகத்தில் உள்ள மற்றவர்களே கூறுகிறார்கள். அதே நேரத்தில் மற்ற மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.