விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது.
தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, மாநாடு வெற்றி போல், அரசியல் களத்திலும் விஜய் வெற்றியடைய அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், விசிக எம்.பி ரவிக்குமார், ஆதவ் அர்ஜுனா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் விஜய்யை வரவேற்றுள்ளனர்.
பா.ரஞ்சித்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி, தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். மேலும், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி, மத, வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘உங்களது புதிய பயணத்திற்கு All The Best செல்லம்’ என குறிப்பிட்டு விஜய் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “திரைத்துறையில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபு
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார். “என் தம்பி விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் அரசியலில் முதல் படி எடுத்து வைத்துள்ளார் அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் தனது அப்பாவின் ஆசி அவருக்கு எப்போதும் இருக்கும் “என கூறியுள்ளார்.
ரெஜினா
நெல்லையில் பேட்டியளித்த நடிகை ரெஜினா காசண்ட்ரா, “விஜய் வெற்றிகரமான நடிகர், வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார்.அவருக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
சிபி சத்தியராஜ்
சிபி சத்தியராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “தளபதிக்கு வாழ்த்துக்கள்.. விஜய் அண்ணின் தனது முதல் மாநாடு! அவரது புதிய பயணம் அவருக்கு நேர்மறையையும் வெற்றியையும் தரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்