திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான எண்டப்புளி ராஜ்மோகன் இன்று நிர்வாகிகளுடன் வந்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் திருச்சி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக (மணப்பாறை தொகுதி) பணியாற்றி வருகிறேன்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளராகவும் பணியாற்றி வருகிறேன்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 24.10.2024 ஆம் தேதி, மதுரை கே.கே நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்…
அப்போது எடப்பாடி பழனிச்சாமி தூண்டுதலின் பேரில், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரிலேயே வந்து முற்றுகையிட்டு, அவர் எங்கும் நடமாட முடியாத ஒரு நிலையை தமிழகத்தில் அவர் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.’ என்பதை செய்தியாளர் முன்பாக எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என பொதுவெளியில், அச்சுறுத்தல் விடுத்து, இருதரப்பினருக்கும் இடையே மோதலை உருவாக்கி, சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில், பேசி உள்ளார்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.
மேற்படி நபரின் செயல், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 196 இன் கீழ் குற்றச் செயலாகும். எனவே, அரசியலமைப்பு பதிவில் உள்ளவர் அந்த பதவிக்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன் நகல், தமிழக உள்துறை செயலர், சட்டப்பேரவை சபாநாயகர், காவல்துறை டிஜிபி,திருச்சி டிஐஜி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.