திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சீனிவாசன்; திருச்சி தெற்கு மாவட்ட த.வெ.க., இளைஞரணி தலைவர். இவரது தலைமையில் ஏழு பேர், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்க, ‘இனோவா’ காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி, பெரியசெட்டி தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஜய் (28), காரை ஓட்டினார். மதியம் 12.30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உசேன்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது காரின் பின் வலதுபக்க டயர் வெடித்தது.
அதில், கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கலைக்கோவன்(45), ஆகியோர் இறந்தனர்.
மேலும், காரில் பயணித்த மலைக்கோட்டை ஜான் மகன் ஹரி, 26, திருவானைக்காவல் கோபால்சாமி மகன் குணசேகரன், 37, வரதராஜன் மகன் ஸ்ரீஹரி, 24, திருச்சி சிங்காரத்தோப்பு அப்துல்ஹக்கீம் மகன் அசார், 25, டிரைவர் அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை பாரிமுனை, செம்புதாஸ் தெருவைச் சேர்ந்தவர் வசந்த், 20. அவரது நண்பர் ரியாஸ்,19. இருவரும், சென்னையில் இருந்து, விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க, இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இரு சக்கர வாகனத்தை வசந்த் ஓட்டினார். ரியாஸ் பின்னால் அமர்ந்து கட்சிக்கொடியை உயர்த்திப் பிடித்து சென்றார்.
இவர்கள், நேற்று காலை, 6.40 மணியளவில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சிவசங்கரன் சாலை சிக்னல் அருகே சென்றனர்.
அப்போது, சைதாப்பேட்டை வழியாக எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி, அந்த சிக்னலில் வலது புறமாக திரும்பியது. அப்போது, இரு சக்கர வாகனம் மோதியதால், வசந்த் மற்றும் ரியாஸ் ஆகியோர் துாக்கி வீசப்பட்டனர். வசந்த் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகாயமடைந்த ரியாஸ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதே போல, சென்னையில் இருந்து, விஜய் கட்சி மாநாடுக்கு, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர், விபத்தில் பலியானார்.