சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த, சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் பாரி நகரைச் சேர்ந்த நரசிங்கம் மனைவி பழனியம்மாள் (59) நடைமேடையிலிருந்து தனது உடைமைகளுடன் வெளியே வந்தார். நுழைவாயில் பகுதியில் வந்து பார்த்தபோது அவரது உடைகளில் வைக்கப்பட்டிருந்த நகை, ரொக்கம், ஆதார்கார்டு மற்றும் ஏடிஎம் அட்டைகளிருந்த கைப்பையை காணவில்லை.
உடனடியாக நடைமேடையில் சென்று பார்த்தபோது, அவர் அருகில் நின்றிருந்த ரயில்வே ஒப்பந்த பணியாளர்கள் அங்கு நடமாடியது நினைவுக்கு வந்தது. உடனே இது குறித்து ஜங்ஷன் ரயில்வே காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரயில் நிலைய காவல் ஆய்வாளர் மோகனசுந்தரி தலைமையிலான ரயில்வே போசார், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை அழைத்து 2 தினங்களாக விசாரித்தனர்.
விசாரணையில், திருச்சி அடுத்த சிறுகமணியைச் சேர்ந்த பெண் ஊழியர் செ. வசந்தி (30) நகைப்பையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிந்து வசந்தியை கைது செய்து அவரிடமிருந்த நகைப்பையை மீட்டனர். அதில் சுமார் 16 பவுன் நகைகள், கைப்பேசி, மற்றும் வங்கி, ஆதார் அட்டைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.