Skip to content
Home » தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி..  தி.மு.க., என்பது ஆலமரம். ‘காய்த்த மரமே கல்லடி படும்’ என்பது பழமொழி. அதனால், விஜய் பேச்சு குறித்து கவலைப்படவில்லை. அவரின் பேச்சுக்கு, வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா..  விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை; குழப்பத்தில் இருக்கிறார். விஜய் தேசியவாதியா அல்லது பிரிவினைவாதியா என, தெளிவுப்படுத்த வேண்டும். விஜய் வருகையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; தி.மு.க.,வுக்கு தான் பாதிப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..  காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. அதில், எந்தவித இடப்பெயர்ச்சியும் ஏற்பட வாய்ப்பில்லை.

விசிக துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா..  ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு, ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க துவங்கி உள்ளன. எல்லாருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே, இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழகம் அரசியல் களம், புதிய பாதையை நோக்கி பயணப்படும்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்.. தற்போதே, தி.மு.க., கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விஜய் கட்சிக்கு தாவ தயாராக உள்ளன. அக்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி பேச்சு நடத்துகிறார். நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு இல்லை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்து கொள்ள வேண்டும். அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்து போகவில்லை. திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. அது வேறு. இது வேறு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!