தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படியும், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படியும், பேராவூரணி பகுதியில் உள்ள பேக்கரிகள், உணவுப் பொருள் தயாரிப்பு நிலையங்களுக்கு வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று விளக்கம் அளித்தனர். அப்போது இனிப்பு வகைகள், உணவுப் பொருள்களில் தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள், அளவுக்கு அதிகமான நிறமூட்டிகள், செயற்கை சுவையூட்டிகளை சேர்க்கக் கூடாது. அவ்வாறு அளவுக்கு அதிகமான நிறமூட்டிகள் சேர்த்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து , இனிப்புகள்,
உணவுப் பொருட்கள் தயாரிப்போர், ஊழியர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அதிக நிறமூட்டி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்களுக்கு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத, பாதுகாப்பான உணவுப் பொருட்களை விற்பனை செய்யுமாறு தயாரிப்பாளர் மற்றும் பணியாற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.