கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள் வருவதும், வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்றவற்றை தின்று சேதப்படுத்தி செல்வதும், வளர்ப்பு விலங்குகளுக்கு வைத்து உள்ள தீவனங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சூறையாடுவதும் அதனை வனப் பகுதிக்குள் வனத் துறையினர் விரட்டுவதும், தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஆலாந்துறை அடுத்த செம்மேடு, ஆலங்குட்டை பகுதியில் நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி பகுதி காட்டு ராஜாவை அப்பகுதி விவசாயி மேற்கு நோக்கி செல்லுமாறு கூறுகிறார். அதனை தொடர்ந்து வனத்துறை வாகனம் அதனை வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க பாதுகாப்புடன் பின் தொடர்ந்து செல்வது போன்ற செல்போன் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.