Skip to content
Home » பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்….. மாநகராட்சி முடிவு

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்….. மாநகராட்சி முடிவு

  • by Senthil

திருச்சி மாநகராட்சி  சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது.  ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்  மேயர் அன்பழகன்  கூறியதாவது:

திருச்சி மாநகரில் கனமழை பெய்த போதிலும் மாநகரில் எந்த சாலையிலும் தண்ணீர் தேங்கவில்லை.திருச்சி மாநகராட்சி பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 கோடி செலவில் 451 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளது.

மேலும் மாநகரில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கிறது.இதற்கு காரணம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பது மட்டுமல்லாமல் துப்புரவு பணியாளர்கள் நல்ல முறையில் வேலை பார்த்து வருவதால் குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது.இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் அனைவருக்கும் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சியில்அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைப்பது என்றும், மேலும் அங்கு அமைய உள்ள கனரக சரக்கு வாகன முனையத்துக்குபேரறிஞர் அண்ணா பெயரை வைப்பதென்றும்  மாநகராட்சி  முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன்:எனது வார்டு தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியில் மழை நீர் தேங்கி வந்தது. அதனை சரி செய்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே சமயத்தில் தில்லைநகர் மெயின் ரோட்டில் மழை நீர் வடிகால் தேங்கும் பகுதியை சரி செய்து கொடுக்க வேண்டும். தில்லைநகர் பகுதியில் சுகாதார மையம் கட்டி தர வேண்டும்.

அம்பிகாபதி (அதிமுக,மாநகராட்சி தலைவர்):திருச்சி பஞ்சப்பூரில் ரூ.349.98 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், பல்வகை பயன்பாட்டு வசதிகள் மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 93 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் விரைந்து நடைபெற்று விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் என பெயர் சூட்ட அரசின் அனுமதி பெற கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதிய முனையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.எனது வார்டு புதுக்கோட்டை மெயின் ரோட்டில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ் (மாக்சிஸ்ட் கம்யுனிஸ்ட்) :
துப்புரவு பணியாளர்களின் போனஸ் பிரச்சனைக்கு மாநகராட்சி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது வார்டில் வாய்க்கால்களை தூர்வாரியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மின் விளக்குகள் சரியான வெளிச்சத்தில் எரியவில்லை. அதனை சரி செய்ய வேண்டும்.

சுரேஷ் (இ. கம்யூனிஸ்ட்) :

சென்ற மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து,
செய்யார் தோப்பு பகுதியில் பன்னாட்டு வாகனம் நிறுத்துமிடம் திறந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்து செல்வம் (திமுக):

எந்த வித அறிவிப்பு இன்றி எப்பொழுது பன்னாட்டு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்தீர்கள்.

மேயர் அன்பழகன் :
தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போலீசார் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.
இன்னும் அதனை யாரும் டெண்டர் எடுக்காததால் மாநகராட்சி நடத்தி வருகிறது.

அப்பீஸ் முத்து குமார் (மதிமுக):
எனது வார்டில் பம்பிங் ஸ்டேஷனில் பிரச்சனை உள்ளது.அதனை சரி செய்ய வேண்டும்.

ஜவகர் ( காங்கிரஸ்):
ராஜகோபுரம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததை சரி செய்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் கோவில் பகுதியில் கழிவறை இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ரெங்கா ரெங்கா கோபுரம் பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

முத்து செல்வம் (திமுக):
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சாலை அமைக்க நிதி வழங்கினார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஏன் அந்த ஏரியாவுக்கு சாலை போடவில்லை.எப்பொழுது எனது வார்டுக்கு நீர் தேக்க தொட்டி கட்டி தருவீர்கள்.கொரோனா காலத்தில் ஒரு தனியார் நிறுவனம் குப்பைகளை அள்ள மாநகராட்சிக்கு பணிகள் செய்தது அந்த நிறுவனத்திற்கு ரூபாய் 4 லட்சம் பணம் பாக்கியுள்ளது. அதனை எப்போது தருவீர்கள்

ராமதாஸ் (திமுக):

தீபாவளி நெருங்கும் நிலையில்
குடிநீர் டேங்க் ஆபரேட்டர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கவில்லை என புகார் வந்துள்ளது.

மேயர் அன்பழகன் :

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

சாதிக் (திமுக):மரக்கடை புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை தீபாவளிக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் திறப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

கூட்டத்தில் 99 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!