Skip to content

கோவை, திருச்சி அடுத்து சென்னையில் ஐடி ரெய்டு.. எடப்பாடி நண்பரின் குடும்ப பிசினஸ் லிங்க்…

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிஎஸ்கே குழுமம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் தொழிலதிபர் பெரியசாமி அதிமுக ஆதரவாளர் என்றும் குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது, இந்த நிறுவனம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையின்  முக்கிய ஒப்பந்ததாரராக இந்த குழுமம் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் தான் அரசு கட்டுமானப்பணிக்கான முதன்மை ஒப்பந்ததாரராக செயல்பட்டது. இந்த குழுமம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் பல நூறு கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து கடந்த 2019 ஏப்ரல் மாதம் பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.112 கோடி வரை வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த நிலையில் நேற்று மீண்டும் பிஎஸ்கே நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதற்கு காரணம் சேலம் இளங்கோவனின் சம்மந்தி  பாலசுப்பிரமணியின் அஸ்வின் பேப்பர் மில்ஸ் மற்றும் மகன் கவனித்துக்கொள்ளும் முசிறிஎம்ஐடி கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறையின் சோதனை தொடர்ச்சி என கூறப்படுகிறது. இது பற்றி வருமானவரித்துறை தரப்பினர் கூறப்படுவதாவது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த எம்.புதுப்பட்டியில் உள்ள எம்ஐடி கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளிகள், முசிறியில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரியில் கடந்த 22ம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்களை இளங்கோவனின் மகன் பிரவீன் குமார் கவனித்து வருகிறார். இந்த நிறுவனங்களில் பிரவீன் குமாரின் மனைவி மோனிகாவும் ஒரு இயக்குனராக உள்ளார். இளங்கோவனின் சம்மந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் 3வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. அங்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கின . அஸ்வின் நிறுவனங்களில் மோனிகா ஒரு இயக்குனராக உள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இளங்கோவனின் முசிறி கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் முசிறியில் நடத்தப்பட்ட சோதனையில் கோவை அஸ்வின் பேப்பர் மில்ஸ் மற்றும் முசிறி எம்ஐடி நிறுவனங்களில் இருந்து  பிஎஸ்கே குழும நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே  சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள டூமிங்குப்பம் பகுதியில் பிஎஸ்கே குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இப்படியாக கோவை அடுத்து திருச்சி தற்போது சென்னை என இளங்கோவனின் குடும்ப பிசினஸ் லிங்க் பரவியிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!