திருச்சி கே.கே.நகர் இந்தியன் பேங்க் காலனியில் வசிப்பவர் முனைவர் செல்வமதி வெங்கடேசன், இவர் திருவள்ளூரில் துணை கலெக்டராக பணியாற்றுகிறார். இவரது மகள் டாக்டர் எஸ்.வி.ஸ்வஜன்யா.
இவருக்கும் பொறியாளர் .எம்.எஸ். முகேஷ் குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமண அழைப்பிதழே வித்தியாசமாக அச்சிடப்பட்டது.அதாவது துணிப்பையில் திருமண பத்திரிகையை அச்சிட்டு, நண்பர்கள், உறவினர்களுக்கு அந்த பையை கொடுத்து திருமணத்துக்கு அழைத்தனர்.
இவர்களது திருமணம் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 21ம் தேதி விமரிசையாக நடந்தது.
திருமண வைபவங்களின் போது மணமகன் மணமகளின் கழுத்தில் மாங்கல்யம் கட்டுதல் என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு
கடைபிடிக்கப்படும், மரபு…… சடங்காகும். ஆனால் இந்த திருமணத்தை சற்று வித்தியாசமாக நடத்த இருதரப்பினரும் பேசி முடிவு செய்தனர்.
ஆணும், பெண்ணும் சமம் என்று போற்றப்படும் நிலையில் ஏன் மணமகள் மட்டும் தாலி கட்ட வேண்டும்? மணமகனும் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அந்த முடிவு. திருமண விழாவில், மணமகள் …… மாப்பிள்ளைக்கு தாலி கட்டுவார். அதை காலம் முழுவதும் அவர் ஏற்று நடக்க வேண்டும் என்பதே இரு தரப்பாரும் பேசி எடுத்த முடிவு.
அதன்படி மணமேடையில் முதலில் மணமகன் முகேஷ் குமார்…… மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டினார். அப்போது கெட்டி மேளம் முழங்கியது. மங்கலஇசை இசைக்கப்பட்டது. அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து மணமகள் டாக்டர் எஸ்.வி.ஸ்வஜன்யா……. மணமகனின் வலது கரத்தில் மணிக்கட்டு பகுதியில் மாங்கல்யத்துடன் கூடிய தாலி செயினை கட்டினார். அது பிரேஸ்லட் அளவில் இருந்தது. ஆனால் அதில் மணமகள் அணிந்திருப்பது போல மாங்கல்யம் கோர்க்கப்பட்டு இருந்தது. மணமகள் இந்த தாலியை கட்டும்போது மங்கல இசை எழுப்பி அட்சதை தூவி அனைவரும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
திருமணத்தில் இது மட்டும் புதுமை அல்ல. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புதுமையாக செய்திருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பனைமர விதை பந்துகள் கொடுக்கப்பட்டது. அது வைக்கப்பட்டிருந்த பையில், “பனை விதை மாநில விதை,
மாநிலம் முழுவதும் அதை விதை” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.
திருமண கோலத்தில் மணமக்களும்,திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் பனை விதைகளை நடவு செய்தனர். அத்துடன் திருமண மண்டபத்தில் பழங்கால இசைக்கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான திருமணம் திருச்சியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இந்த திருமணம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
திருமண வாழ்த்து மடல் புத்தகம் வழங்கப்பட்டது. அதில் அனைவரும் புதுமை திருமணத்தை வாழ்த்தி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இனி வருங்காலங்களில் ஆண்களும் தாலி கட்டிக்கொள்ளும் நிலைக்கு திருச்சியில் விதை ஊன்றப்பட்டு விட்டது. இனி அது விருட்சமாக வளரத்தானே செய்யும்.
பண்பாடு போற்றும் புதுமையை வரவேற்போம்.