பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று ( வியாழன்) வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார்.நடத்துநராக பொள்ளாச்சியை சேர்ந்த கதிரேசன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து ஒத்தகால் மண்டபம் பாலம் நோக்கி வந்த போது பஸ்சின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. அதைப் பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து பஸ்சை ஓரமாக நிறுத்தினார். அதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் பஸ்சில் தீப்பிடித்தது. சாலையில் பஸ் கொளுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் செட்டிபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்க முயன்றனர். சில மணி நேரம் போராடி பஸ்சில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.இதில் பஸ் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர்.