திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி சத்யகலா (35). இவரது போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர்களது 10ம் வகுப்பு பயிலும் மகள் பெயரையும் அவர் பயின்று வரும் பள்ளி பெயரையும் கூறிய மர்ம நபர், அவருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ரூ. 28,000 வழங்கவிருப்பதாகவும், அதற்காக வங்கி விவரங்களை கூறுமாறும் தெரிவித்துள்ளார்.
ஆனால் விவரங்களை கூற மறுத்த நிலையிலும், தாங்கள் அரசுத்துறை அலுவலர்கள் எனவும், அரசு முத்திரையுடன் கூடிய விவரங்களை வாட்சாப்பில் அனுப்பி நம்ப வைத்து, ஏமாற்றி வங்கி விவரங்களைப் பெற்றுள்ளனர். அடுத்த சில விநாடிகளில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 19, 890 தொகையை மோசடி செய்து எடுத்து விட்டனர். பிறகு அந்த தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டபோது தொடர்புகொள்ள இயலவில்லை. இது குறித்து திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.