தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தோறும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சுற்றுசுழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலகங்கள், தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காட்பாடி, அரக்கோணம், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, திருப்பத்தூர், தூத்துக்குடி, ராதாபுரம், ரங்கம், தஞ்சை, தேனி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், அவிநாசி, தேன்கனிக்கோட்டை, திருச்செங்கோடு, குமரி, அரூர், காரைக்குடி, ஒட்டன்சத்திரம், கோவை, சங்கராபுரம் உட்பட இடங் களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு என தமிழகம் முழுவதும் 34க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.33,50,000 பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலன்ஸ் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்துக்குள் நுழைந்த போலீசார் பணியாளர்களை எச்சரித்து, அவரவர் இருக்கைகளில் மேஜை டிராயர்களில் உள்ள ரொக்கத்தை எடுக்கக் கூடாது, அப்படியே விட்டுச்செல்லவேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அலுவலகத்தில் பணியாளர்கள் இருக்கையில் வைத்திருந்த ரொக்கத்தை போலீசார் எடுத்தனர். அவற்றையும், அலுவலகத்தில் முறைப்படி வசூலானதாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தொகையையும் வைத்து ஒப்பிட்டு சரிபார்த்தனர். இதில் கணக்கில் வராத வகையில் ரூ. 68,9000 ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த விஜிலன்ஸ் போலீசார் முடிவு செய்துள்ளனர்..