தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வருகிறது. இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக லாரன்ஸ் ஏற்கெனவே அறிவித்த விவகாரம் கிளம்பியுள்ளது.
இச்சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுமாறு லாரன்ஸுக்கு அம்மாநில புதிய அரசியல் கட்சியான உத்தர்பாரதிய விகாஸ் சேனா (யுபிவிஎஸ்) அழைப்பு விடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய லாரன்ஸ் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் உள்ளார்.
லாரன்ஸுக்கு யுபிவிஎஸ் தலைவர் சுனில் சுக்லா எழுதியுள்ள கடிதத்தில் தனது அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரது வெற்றிக்காக தங்கள் கட்சி தீவிரமாகப் பாடுபடும் என உறுதி அளித்துள்ளார். ஆனால் லாரன்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.