மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில்வே மார்க்கத்தை ஒட்டிய தனியூர் தெரு என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் ரகசியமாக பட்டாசு தயாரிப்பு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, தகர ஷெட் ஒன்றில் இருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, போலீசார் உள்ளே சென்று சோதனை நடத்தியதில் அங்கு நாட்டுவெடி தயாரிப்பு நடைபெற்று வந்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அளித்த தகவலின்பேரில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருவாலங்காட்டில் வெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாலமுருகன்
என்பவர் வரவழைக்கப்பட்டு வெடி மருந்துகளின் விபரம் அறியப்பட்டது. அதன்படி சோடியம் நைட்ரேட் 100 கிலோ, சல்பர் 25 கிலோ, அலுமினிய பவுடர் 6 கிலோ மற்றும் கலவை செய்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ வெடி மருந்து பொருள்கள் மற்றும் பாதி தயாரிப்பில் இருந்த நாட்டு வெடிகள் ஆகியவை அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வட்டாட்சியர் விஜயராணி முன்னிலையில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்ட ஷெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர், கைப்பற்றப்பட்ட பொருட்களை திருவாலங்காடு பட்டாசு தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர். வெடி உற்பத்தி தயாரிப்பில் ஈடுபட்ட தூக்கணாங்குளம் குமார் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.