மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது சிறிய விசைப்படகில் வைத்தியநாதன், அவரது சகோதரர்கள் ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த குமரேசன், நாகூரைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 9-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், அவர்களில் விசைப்படகு உரிமையாளர் வைத்தியநாதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக யாழ்பாணம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக உறவினர்களுக்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில், புதுப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார் மற்றும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின்
குடும்பத்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அலுவலகத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மீனவர்கள் மனு அளித்து, வைத்தியநாதன், ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன் ஆகிய 4 பேர் உள்ளிட்ட 6 மீனவர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய உறவினர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.