சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தைகளை விட்டு விட்டு பாடியதால் தமிழ் மக்கள் கொந்தளித்தனர். பாஜக தவிர அனைத்துக்கட்சி தலைவர்களும் இதனை கண்டித்தனர். இந்த பிரச்னைக்காக கவர்னரையே மாற்ற வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த பிரச்னை காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது. அனைவரும் தங்களுக்கு தமிழ்த் தாய் வாழ்த்து தெரியுமா என்ற கோணத்தில் தன்னைத்தானே பரிசோதனை செய்யும் அளவிற்கு இந்த சர்ச்சை எழுந்த நிலையில் தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நூதன விழிப்புணர்வு போட்டியை அறிவித்தது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
தஞ்சையில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஜோதி அறக்கட்டளை சார்பில் ஹெல்மெட் அணிந்து வரக்கூடிய நபர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை
பிழையின்றி பாடினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகள், பெற்றோர் ஆர்வமுடன் பெட்ரோல் பங்க் வந்து தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடி 2 லிட்டர் பெட்ரோல் தங்களது வண்டியில் நிரப்பிச் சென்றனர். தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக முதலில் பாடிய 25 நபர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது.