தீபாவளிக்கு இன்னும் 8 நாட்கள் இருக்கிறது. மக்கள் தீபாவளி பர்சேஸில் தீவிரமாக உள்ளனர். இப்போதே திருச்சியில் கடைவீதிகள் களைகட்டிவிட்டது. பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், சிறுவர்கள், இளைஞர்கள் இப்போதே பட்டாசு வெடிக்கத் தொடங்கி விட்டனர்.தீபாவளி நெருங்கிவிட்டது என்பதற்கான சமிக்ஞைகள் பட்டிதொட்டி எங்கும் பறையறைந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் திருச்சி மாநகரம் முழுவதும் ஒலிபெருக்கிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டி வைத்து தீபாவளி வர்த்தக விளம்பர ஒலிபரப்பு என்ற பெயரில் காலை 6 மணிக்கே ஆரம்பித்து விடுகிறார்கள். மக்கள் பரபரப்புடன் சாலைகளில் செல்லும்போதும், பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும்போதும் இந்த ஒலிபெருக்கிகளின் சப்தம் தான் காதை துளைக்கிறது. இதனால் விபத்துக்கள் கூட ஏற்படுகிறது.
வாகனங்கள் ஒலி எழுப்பும் சத்தம் கூட கேட்காத அளவுக்கு ஒலிபெருக்கிகளின் சப்தம் இருக்கிறது. இரவு 10 மணி வரை இந்த ஒலிபெருக்கி அலறல் தாங்க முடியவில்லை என மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
பள்ளிகள், மருத்துவமனைகள் என எதைப்பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. தங்களுக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக இப்படி சப்தமாக ஒலிபெருக்கிகளை இயக்கி மக்களின் அமைதியான போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள்.
தீபாவளிக்கு 4, 5 நாட்கள் இருக்கும்போது ஒலிபரப்பினால் கூட தீபாவளி பரபரப்பில் மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கடந்த 15 நாட்களாக திருச்சியின் பெரும்பகுதிகளில் இந்த ஒலிபரப்பு நடக்கிறது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் நிறைந்த திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், ஆர்எம்எஸ் காலனி போன்ற பகுதிகளில், இந்த ஒலிபரப்பு காதை துளைக்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
இவர்களுக்கு மாநகர போலீசார், மாநகராட்சி எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இந்த விளம்பரம் செய்பவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அமைச்சர், மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர், வார்டு செயலாளர், கவுன்சிலர் என அனைவரின் பெயர்களையும் கூறி அவர்களும் உங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள் என கூறிக்கொள்கிறார்கள்.
இதனால் போலீசாரும், மாநகராட்சியும் இந்த ஒலிபெருக்கிகளை கண்டுகொள்வதில்லை. ஆனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் படும் அவஸ்தையை பற்றி இவர்கள் கண்டுகொள்வதில்லை. போலீசாரும், மாநகராட்சியும் இதற்கு ஒரு விதிமுறைகளை வகுத்து சப்தத்தையும் நேரத்தையும் குறைத்து விளம்பரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.