சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோடியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினம்பாக்கம் லூப்சாலையில் நள்ளிரவில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட தம்பதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் பொறுத்தவரை காமராஜர் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்வதற்காக மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக லூப்சாலையில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
இதனால் இரு புறங்களில் வாகன போக்குவரத்து ஏற்படாத வண்ணம் இரவு நேரங்களிலும் காவலர்கள் பணியமர்த்தபட்டு வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு 12 மணிக்கு மேல் அதிகளவில் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் வருவதால் காவலர்கள் அங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற அறிவுறுத்தலை வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில் நேற்று நள்ளிரவு ஜோடி மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர்.
அவரை அங்கிருந்து காரை அப்புறப்படுத்துமாறு காவலர்கள் கூறியுள்ளனர். அதற்கு காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஏளனமாக பேசி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் காவலர்களை உருவகேலியும் செய்துள்ளார். இதனை போலீசார் உடனடியாக வீடியோ எடுத்துள்ளனர். போலீசார்கள் அவர்களை வீடியோ எடுத்ததற்காக காரை விட்டு ஏற்றுவதற்காகவும் முயற்சித்துள்ளார்.
தகவல் குறித்து மைலாப்பூர் போலீசார் காரை இயக்கி வந்த நபர் யார், உடனிருந்த பெண்மணி யார் என்ற விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியானது. இந்த நிலையில், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன், அவருடன் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்த அவர்களிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.