தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்,செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு எதிராக ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டிற்கு கவர்னர் என்ற பதவியே தேவையில்லை. தமிழினத்திற்கு எதிராக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக செயல் படக்கூடிய கவர்னர், தேவையில்லை என தமிழ்நாடு சட்டமன்றம் கூடி தீர்மானம் நிறைவேற்றி, தனது தனித்துவத்தை இந்திய அரசுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.
ஆளுநர் அரசு ஊழியர் தான். 8 கோடி தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு சேவை புரிய வந்தவர்தான். தமிழர்களின் உணர்வை மதிக்காமல் தமிழ்நாட்டு மக்களிடையே கலவரத்தை உண்டாக்குவதையே ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். அவரை நீக்க வேண்டும். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக ஆளுநர் உள்ளார். எனவே, தமிழக அமைச்சரவை கூடி அவரை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கவர்னர் என்பவர் மந்திரி சபை போடும் தீர்மானத்திற்கு பரிந்துரை செய்வதுதான் இவரின் வேலை. ரப்பர் ஸ்டாம்ப் வைத்து கையெழுத்து போடுவதுதான் கவர்னரின் வேலை. ஆர்எஸ்எஸ் கொள்கையை செயல்படுத்தும் செயல்வீரராக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.