கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கோவை காங்கிரஸ் கட்சியைக் காப்போம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் இன்று (அக்.20) நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி.மனோகரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பகவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.என்.கந்தசாமி, அழகு ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் விஜயகுமார், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்திரகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.. அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மயூரா ஜெயக்குமார் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அவருடைய உதவியாளராக இருந்து வந்த கே.கருப்புசாமியை நியமித்து, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கட்சியின் உண்மை தொண்டர்களை புறக்கணித்தும், கட்சியின் மீது ஈடுபாடு இல்லாத நபர்களை அந்த பதவிக்கு நியமித்தும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுகிறார். மேலும், தலைவர் ராகுல் காந்திக்கு துரோகம் விளைவிக்கும் செயல்களை அரங்கேற்றி வருகிறார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் 2011, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு மூன்று முறையும் தோல்வி அடைந்தார். கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் மயூரா ஜெயக்குமாரை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கி, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திடுமாறும் முடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வழி வகை செய்ய வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.